Unrelenting Grief
Unrelenting Grief
I have often heard many people talk about unrelenting grief, and I have also read about it. An incident epitomizing this grief happened in my life not long ago.
Joe, a friend of mine, was unwell. Even after consulting many doctors for over three months and taking numerous medications, there was no relief. They had him undergo many medical tests such as x-rays and scans, and they also examined the blood work, but no one could figure out the illness he was ailing from.
Joe was Polish, over eighty years of age. I was shocked when I saw him in person after several months. He himself said that his weight had reduced by half. The clothes hung on his body like those hanging on hooks and his long neck was bent in the middle. He looked very tired, and for every two sentences, he opened his mouth and swallowed fresh air to talk.
He came to Canada after the Second World War and had been in Canada for 60 years. As he was describing the incidents that occurred during his younger years in Poland, he told me the story of his father raising pigeons back then. “My father raised and sold numerous pigeons as a hobby. He was also skilled in training messenger pigeons. Pigeons need good accommodation and food, and they should be looked after in such a way that they are happy in the nest. If you feed them regularly at the same time every morning, they will return no matter how far away you had taken them from home and left them somewhere.”
On weekends, Joe and his father used to train pigeons. They would take the pigeon being trained a mile away and throw the bird up in the air. It would fly back to its nest before they returned home. They would increase the distance little by little. They would often leave home early in the morning and travel a long distance to release the pigeons in training. As the mealtime was in the morning, the pigeons would fly the distance and return home somehow. A couple of pigeons would go missing every now and then, but almost all of them would return.
“My father had a beautiful white pigeon whose tail was of slightly yellowish hue as if it had been sprinkled with mud. I named it Albinka. Albin means white in Polish. Among the pigeons we had raised, I had never seen a more beautiful and intelligent one than Albinka. In olden days, the kings would send messages using such pigeons. Even in my time, an acclaimed physician had even obtained emergency medicine tied to the leg of a pigeon. My father and I had a special affinity for Albinka. This pigeon got used to flying distances of up to 50 miles as we increased the distance little by little. Regardless of which direction we took to leave Albinka at a distance, it would always come home.”
“My father had a friend named Pranislo who lived in the next town. Whenever he came home for a visit, my father would talk to him about Albinka. Pranislo tried to persuade my father to sell Albinka to him, and he was ready to pay any price for it. My father knew how much I loved that pigeon. The first thing I would do after coming home from school was picking up Albinka to pet it, so my father kept ignoring his friend’s request.”
“In September 1939, Germany invaded Poland. That’s how World War II began. Poland fell completely within a month, and we never expected it to happen that fast. Within a year, the situation got worse in Poland. We were a big family, and my father could not meet the expenses. One day when I was at school, he sold Albinka to Pranislo for a good price. He later told me that the money that came from selling the pigeon fed our family for two months. When I came home from school and learned that my father had sold Albinka, I was heartbroken. I refused to eat for a whole day. There was no point in starving in those times when we all struggled for just a piece of bread.”
“My father had made one thing clear to Pranislo when he sold the pigeon. ‘This pigeon is trained and very intelligent. If it ever flies back to our home, I will not give it to you again.’ Pranislo had agreed to the condition and bought it.”
“Two weeks passed. One morning when I opened the door and stepped out to go to school, I was shocked to see that Albinka, whom I raised, had come back. It stood trembling at the door and fell down when it craned its neck to look up. As I lifted Albinka up in my hands, it throbbed like a heart. Both of its wings had been clipped. Still, it had covered about seventeen miles by walking for two weeks. Because pigeons are birds that perch on branches, they have three toes in the front part of their feet and one in the back to hold on to the branch. Albinka’s hind toe was completely worn out from walking. The front toes were half blunted and bleeding. When I tried to make it stand, Albinka slid down and collapsed, unable to stand. It died the same night.”
After telling me this story, my friend started sobbing uncontrollably. It was hard to say whether he thought of his father, the pigeon or himself. As he tried to suppress his emotions, something happened beyond his control. His emaciated body throbbing in agony, my friend wept. Tears poured down from the 80-year-old eyes. It was the first time in my life that I saw someone so old cry. He cried thinking of a pigeon that died 70 years ago. I suppose this was what is called unrelenting grief.
***
I thought that Joe would be hospitalized soon after the day he told me the pigeon story, but the doctors decided to have some more tests done. Every day Joe and his wife would go for various medical tests. They would go every morning and return in the evening. This continued for some time. Unable to identify the illness, the doctors were puzzled, and the uncertainty was worrisome for Joe and his wife.
Meanwhile, Joe was getting weaker by the day. In this situation, Joe and his wife invited me and my wife to their home for tea. No matter how hard we tried to decline, they would not accept it. One day, we accepted the invitation and went over to their home. Joe was waiting at the door, standing slightly bent over. His body was extremely pale and emaciated. It almost looked like there were no red blood cells in his body. I had never seen anyone whose skin was so milky white. When I took off my coat, Joe took it from me and hung it. Then we all sat at the table.
On the table were cakes, biscuits, and a sort of salad made of cabbage leaves. Joe’s wife said that he had prepared the salad for us with his own hands in the morning. Sitting next to me, Joe said, “Eat this, eat this.” He asked me how the salad he had made was. I said, “It has a very unique and distinct taste.” Joe took another spoonful and served me. He didn’t eat anything, and he didn’t drink tea either. He said, “I haven’t been hungry for quite some time.” When I raised my head to look at him, I noticed that Joe was looking at me intensely with his eyes sunken into his face. I shook my head by way of gesturing and asking him what it was all about. He said, “Drink the tea. It’ll get cold.” I understood immediately that this was the last time, and that I would never drink tea with these good people again.
We thanked our hosts and got ready to leave. Joe stood behind me holding my coat to help me put it on. I noticed that he did that little act with much difficulty, and it was evident from the way he stood with gritted teeth that it took all the strength in his body to stay on his feet. I slipped my hands into the sleeves and pulled up the zipper. He embraced me and then shook my hand, squeezing it hard. When he did that, he was breathing through his mouth.
Joe’s hand was rough and firm like a log. When he arrived in Canada 60 years back as a young man, he could not find work immediately. For several months, he was searching for work everywhere. Eventually, he got a job in a silver mine. He spent many years of his life working thousands of feet below the earth. He said that during those times, the sunlight did not shine on his body because if he went down into the mine in the morning, he would return home only in the evening. Joe had been deprived of sunlight for many years continuously. He also survived two major mining accidents. Some doctors were of the opinion that his illness could have been due to prolonged exposure to the dusty air in the silver mine.
Today I think back to when and how our friendship was formed. It happened as night follows day. He would tell me stories of World War II, and I would listen. He had hundreds of stories. That’s how one day he told me the story of his father raising pigeons. It was a story unknown even to his wife. It never occurred to him to tell the pigeon story to his wife in all those years. For some reason, he wanted to tell me the story, after which he wept thinking of the pigeon that died 70 years ago.
One day Joe’s health condition got worse, and he was admitted to hospital. As he lay in bed in the intensive care unit, various tubes of different colours came out of him. He was placed on artificial respirator. Food was fed through an intravenous tube. Body waste was also discharged through a tube. Only the body lay there but all its functions were carried out from outside, prolonging life artificially. Pain medication was continuously injected into the body.
Joe’s wife, son and relatives consulted with the doctor to make a decision on the difficult question: Should Joe’s life be prolonged artificially, or should he be released? Finally, the decision was made.
Joe could hear but he could not speak. His wife took hold of his hand and spoke to him.
“Should we continue like this, or should we free you from the machine? Squeeze my hand if you want to continue?” Joe’s hand remained inactive.
Joe’s wife continued with the next question. “If the pain reliever is given, you will not feel the pain, but you will lose consciousness for good. If you want to receive it, squeeze my hand.” Joe squeezed her hand.
“I love you. I love you today as I loved you on the day of our marriage. Have a good journey. I will join you soon.” Those were the last words Joe’s wife spoke to him. She squeezed his hands hard and bid him goodbye. Joe died early next morning.
I wonder why I can’t forget Joe. He was not someone who studied with me, nor was he someone who worked with me. He was not a writer or a reader. In fact, he and I had nothing in common. Yet, you could learn how to treat a friend from him. When you approach Joe, his love would surround you like a tent. When he shook your hands, he would do so firmly, and when he embraced you, he would embrace you tightly, smiling at the same time. He would hold your overcoat spread out behind you and wait like a humble servant. He would stand still until you inserted your hands. No one would do it like that for me anymore. For the rest of my life, I will think of Joe when I put my coat on and when I take it off. I suppose it is something I will never ever forget.
ஆறாத் துயரம் (Original text in Tamil)
நான் பலசமயங்களில் பலர் ஆறாத்துயரம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; எழுதியிருப்பதை படித்துமிருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் நான் நேரில் கண்ட சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்தது.
என் நண்பர் ஒருவர் உடல்நலமில்லாமல் இருந்தார். மூன்றுமாதங்களாக பலமருத்துவர்களைப் பார்த்தும் நிறைய மருந்துகள் எடுத்தும் ஒரு பிரயோசனமில்லை. எக்ஸ்ரே, ஸ்கான், ரத்தப்பரிசோதனை என்று நிறையச் செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால் ஒருவருக்கும் நோய் என்னவென்று பிடிபடவில்லை.
அவர் போலந்துக்காரார், வயது எண்பதுக்கு மேலே. பல மாதங்களுக்கு பிறகு ஆளை நேரில் பார்த்த நான் திடுக்கிட்டேன். எடை சரி பாதியாகக் குறைந்துவிட்டதென அவரே சொன்னார். உடைகள் ஆணியில் கொழுவிவிட்டதுபோல உடம்பில் தொங்கின. நீளமான கழுத்து சட்டென்று நடுவிலே வளைந்துபோய் கிடந்தது. மிகக் களைப்பாகக் காணப்பட்டார். இரண்டு வாக்கியத்துக்கு ஒருமுறை வாயை திறந்து காற்றை விழுங்கிவிட்டு பேசினார்.
நண்பர் இரண்டாம் உலகப் போர் முடிந்தபின்னர் கனடாவுக்கு வந்தவர். 60 வருடங்களை கனடாவில் கழித்துவிட்டார். தன்னுடைய இளவயதுச் சம்பவங்களை தொட்டு பேசிக்கொண்டு வந்தவர் தன் தகப்பனார் புறா வளர்த்த கதையை சொன்னார். நிறைய புறாக்களை வளர்த்து விற்பதை ஒரு பொழுதுபோக்காக அவர் செய்தார். தூது ஓலை கொண்டுபோகும் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பதில் வல்லவர். புறாக்களுக்கு தங்குவதற்கு நல்ல வசதியும் உணவும் இருப்பது அவசியம். அவை கூட்டிலே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்ளவேண்டும். கிரமமாக காலை வேளையில் உணவளித்தால் எங்கே கொண்டுபோய் விட்டாலும் அவை திரும்பிவிடும்.
ஓய்வு நாட்களில் என் நண்பரும் அவர் தகப்பனும் புறாக்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள். புறாவை எடுத்துக்கொண்டு ஒரு மைல் தூரம் சென்று அதை ஆகாயத்தில் எறிந்துவிடுவார்கள். இவர்கள் திரும்பமுன்னர் அது பறந்து கூட்டுக்கு வந்துவிடும். சிறிது சிறிதாக தூரத்தைக் கூட்டிக்கொண்டே போவார்கள். அவைகளுடைய உணவு நேரம் காலையில் என்பதால் அதிகாலையிலேயே புறப்பட்டு நெடுந்தூரம் சென்று புறாவை விடுதலை செய்வார்கள். உணவு நேரமானபடியால் புறா பறந்து எப்படியும் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும். ஒன்றிரண்டு புறாக்கள் தொலைவதுமுண்டு. ஆனால் அநேகமாக எல்லா புறாக்களும் திரும்பிவிடும்.
“அப்பாவிடம் ஒரு அழகான புறா இருந்தது. வெள்ளை நிறம், வாலில் மாத்திரம் மண் தூவியது போல கொஞ்சம் மஞ்சள் படர்ந்திருக்கும். அதற்கு நான் அல்பிங்கா என்று பெயர் சூட்டினேன். போலிஷ் மொழியில் அல்பிங்கா என்றால் வெள்ளை என்று பொருள். நாங்கள் வளர்த்த புறாக்களில் அதைப்போல அழகான ஒரு புறாவையோ மூளைத்திறன் கொண்ட பறவையையோ நான் கண்டதில்லை. அந்தக் காலத்து அரசர்கள் கடிதங்களில் செய்திகள் அனுப்புவது இப்படியான புறாக்களில்தான். என்னுடைய காலத்தில்கூட ஒரு புகழ்பெற்ற டொக்ரர் அவசரமான மருந்துகளை புறாவின் காலில் கட்டி தருவித்திருக்கிறார். அப்பாவுக்கும் எனக்கும் இந்தப் புறாவில் தனி ஈடுபாடு இருந்தது. சிறிது சிறிதாக தூரத்தை கூட்டி 50 மைல் தூரம் பறப்பதற்கு அல்பிங்கா பழகிவிட்டது. எந்த திசையில் கொண்டு சென்று விட்டாலும் அது வீட்டுக்கு வந்துவிடும்.
அப்பாவுக்கு அடுத்த ஊரில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் ப்ரனிஸ்லோ. எப்பொழுது அப்பாவைச் சந்திக்க வந்தாலும் அப்பாவிடம் அல்பிங்காவை பற்றி பேசுவார்; அதை தனக்கு விற்கச் சொல்லி அப்பாவை வற்புறுத்துவார். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர் தயாராக இருந்தார். நான் அந்தப் புறாவில் எவ்வளவு அன்பு வைத்திருந்தேன் என்பதை அப்பா அறிவார். பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் என்னுடைய முதல் வேலை அல்பிங்காவை எடுத்து கையிலே வைத்து கொஞ்சுவதுதான். ஆகவே அப்பா நண்பரின் வேண்டுகோளைத் தட்டிக்கொண்டே வந்தார்.
1939ம் ஆண்டு செப்டம்பரில் ஜேர்மனி போலந்தின்மேல் படையெடுத்தது. இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது அப்படித்தான். போலந்து ஒரு மாதத்தில் முற்றாக வீழ்ந்தது. நாங்கள் இ.ப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஒரு வருடத்திற்குள் நிலைமை மிக மோசமானது. எங்கள் குடும்பம் பெரியது. அப்பாவினால் செலவுகளை சமாளிக்க முடியவில்லை. நான் பள்ளிக்கூடத்தில் இருந்தபோது ஒரு நாள் அப்பா ப்ரனிஸ்லோவுக்கு புறாவை நல்ல விலைக்கு விற்றுவிட்டார். அதில் வந்த பணம் எங்கள் வீட்டுக்கு இரண்டு மாதத்திற்கு சாப்பாடு போட்டது என்று அப்பா பின்னாளில் சொன்னார். பள்ளியிலிருந்து வந்த நான் அப்பா புறாவை விற்றதைக் கேள்விப்பட்டு அப்படியே மனமுடைந்து போனேன். ஒரு முழு நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். ஒரு துண்டு ரொட்டிக்கு சிரமப்பட்ட அந்தக் காலத்தில் பட்டினி கிடப்பதில் எந்தவித பொருளும் இல்லை.
ப்ரனிஸ்லோவுக்கு புறாவை விற்றபோது அப்பா ஒரு விசயத்தை அவருக்கு தெளிவாகச் சொல்லியிருந்தார். இந்தப் புறா பயிற்சி கொடுக்கப்பட்டது. அதி புத்திசாலி. இது திரும்பவும் எங்கள் வீட்டுக்கு வந்தால் அதை நான் இன்னொருமுறை உங்களுக்கு தரமாட்டேன். அவரும் சம்மதித்தே அதை வாங்கிப்போனார்.
இரண்டு வாரம் ஓடிவிட்டது. ஒருநாள் காலை நான் பாடசாலைக்கு புறப்பட்டேன். வீட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்ததும் அப்படியே திடுக்கிட்டு நின்றேன். நான் வளர்த்த அல்பிங்கா திரும்பி வந்துவிட்டது. வாசலிலே நடுங்கிக்கொண்டு நின்றது. கழுத்தை சரித்து நிமிர்ந்து பார்த்தபோது விழுந்துவிட்டது. இரண்டு கைகளிலும் அதை தூக்கியபோது இருதயம் துடிப்பதுபோல துடித்தது. அதனுடைய இரண்டு இறக்கைகளும் வெட்டப்பட்டிருந்தன. அப்படியும் 17 மைல் தூரத்தை அது இரண்டு வார காலமாக நடந்தே கடந்திருந்தது. புறா கிளையில் உட்காரும் பறவை என்பதால் அதற்கு காலின் முன்பகுதியில் மூன்று விரல்களும் பின்பகுதியில் ஒரு விரலும் இருக்கும். கிளையில் பிடித்து உட்கார வசதியாக. அல்பிங்கா நடந்து வந்ததில் பின் விரல் முற்றாக தேய்ந்துவிட்டது. முன்விரல்கள் பாதியாக மழுங்கிப்போய் ரத்தம் கசியக் கிடந்தன. நிற்க வைத்தபோது அல்பிங்கா நிற்கமுடியாமல் சரிந்து சரிந்து விழுந்தது. அன்றிரவே இறந்துவிட்டது.”
இந்தக் கதையை சொன்னபோது நண்பர் விம்மி விம்மி அழத் தொடங்கினார். அவர் தன்னுடைய அப்பாவை நினைத்தாரோ, அந்தப் புறாவை நினைத்தாரோ அல்லது தன்னை நினைத்தாரோ தெரியாது. அடக்க அடக்க அவரை மீறி ஏதோ ஒன்று நடந்தது. மெலிந்துபோன அவர் உடம்பு துடிக்க எக்கி எக்கி அழுதார். 80 வயதுக் கண்களில் இருந்து நீர் கொட்டியது. நான் என் ஆயுளிலே இவ்வளவு வயதான ஒருவர் அழுததை பார்த்தது இதுவே முதல் தடவை. 70 வருடங்களுக்கு முன் இறந்துபோன ஒரு புறா. அதை நினைத்து அழுதார். ஆறாத் துயரம் என்பது இதுதான் என்று நினைக்கிறேன்.
***
புறாக் கதையை ஜோ சொன்ன அன்றைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதியாகி விடுவார் என்றுதான் நினைத்தி்ருந்தேன். ஆனால் மேலும் சில பரிசோதனைகள் செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். தினமும் ஜோவும் மனைவியும் பல்வேறு சோதனைகள் செய்தார்கள். அந்தச் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைத்ததும் இன்னும் பல புதிய சோதனைகளைச் செய்யச் சொன்னார்கள். ஒவ்வொருநாள் காலையிலும் வெளிக்கிட்டு போனால் மாலையில்தான் அவர்கள் திரும்புவார்கள். இது சில காலம் தொடர்ந்தது. மருத்துவர்களுக்கு புதிராக இருந்தது. இந்த நிச்சயமற்ற தன்மை ஜோவுக்கும் மனைவிக்கும் கவலையை கொடுத்தது.
ஜோ நாளுக்கு நாள் பலவீனமடைந்து வந்தார். இந்த நிலைமையில் ஒரு நாள் என்னையும் மனைவியையும் தேநீர் விருந்துக்கு அழைத்தார்கள். நாங்கள் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் விடுவதாயில்லை. ஒருநாள் சம்மதித்து அங்கே போனபோது ஜோ எங்களை எதிர்பார்த்து வாசலில் காத்துக்கொண்டு சற்று குனிந்தபடி நின்றார். உடல் வெளிறிப்போய் இருந்தது. அவருடைய ரத்தத்தில் ஒரு சிவப்பு அணுக்கூட இல்லையென்று பட்டது. சருமம் அந்த மாதிரி ஒருவரில் பால் வெள்ளையாக இருந்ததை நான் கண்டது கிடையாது. நான் கோட்டைக் கழற்றியதும் அவர் அதை வாங்கி கொழுவினார். பின்னர் மேசையில் எல்லோருமாக அமர்ந்தோம்.
மேசையில் கேக்கும், பிஸ்கட்டும் கோவா இலையில் செய்த ஒரு வகையான சாலட்டும் இருந்தன. அந்த சாலட்டை ஜோ காலையிலிருந்து தன் கையால் எங்களுக்காகச் செய்ததாக மனைவி சொன்னார். ஜோ எனக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். “இதைச் சாப்பிடுங்கள், இதைச் சாப்பிடுங்கள்” என்றார். அவர் செய்த சாலட் எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் ’அபூர்வமான ருசியுடன் இருக்கிறது’ என்றேன். இன்னொரு கரண்டி எடுத்து பரிமாறினார். அவர் ஒன்றுமே சாப்பிடவில்லை. தேநீரும் அருந்தவில்லை. “சிலகாலமாக பசி எடுப்பதில்லை” என்றார். நிமிர்ந்து பார்த்தபோது என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அவர் கண்கள் முகத்துக்குள் புதைந்துபோய் கிடந்தன. நாடியை உயர்த்தி என்ன என்பதுபோல பார்த்தேன். “தேநீரைக் குடியுங்கள், ஆறப்போகுது” என்றார். உடனேயே எனக்குப் புரிந்துவிட்டது. இதுதான் கடைசி. இனிமேல் இந்த நல்ல மனிதர்களுடன் நான் தேநீர் அருந்தப் போவதில்லை என்று.
நாங்கள் நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம். அவர் என்னுடைய கோட்டை விரித்துப் பிடித்தபடி பின்னால் நின்றார். அந்தச் சின்னச் செயலை அவர் சிரமத்துடன் செய்தார். நிற்பதற்கு உடம்பின் முழுப் பலத்தையும் பாவித்தது அவர் பற்களைக் கடித்துக்கொண்டு நின்றதில் தெரிந்தது. நான் கைகளை நுழைத்து கோட்டை மாட்டி, சிப்பை இழுத்துப் பூட்டினேன். அவர் தழுவினார். பின்னர் கை கொடுத்தார். கையை இறுக்கி அழுத்தினார். அப்படி அழுத்தியபோது வாயால் மூச்சு விட்டுக்கொண்டிருந்தார்.
அவருடைய கை மரக்கட்டைபோல உறுதியாக சொரசொரவென்று இருந்தது. இளைஞராக அவர் 60 வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு வந்தபோது உடனே வேலை கிடைக்கவில்லை. பல மாதங்கள் வேலைக்காக அலைந்தார். இறுதியில் வெள்ளிச் சுரங்கத்தில் வேலை கிடைத்தது. அவர் வாழ்நாளில் பல வருடங்களை பூமிக்கு பல ஆயிரம் அடிகள் கீழே வேலை செய்தபடி கழித்தார். அந்தக் காலங்களில் சூரிய ஒளி தன் உடம்பில் படவில்லை என்று சொல்லியிருக்கிறார். காலையில் சுரங்கத்துக்குள் இறங்கினால் மாலையில்தான் வீடு திரும்புவார். சூரிய வெளிச்சத்தை பல வருடங்கள் தொடர்ந்து இழந்துவிட்டார். சுரங்கத்தில் ஏற்பட்ட இரண்டு பெரிய விபத்துகளில் இருந்தும் தப்பியிருக்கிறார். இப்பொழுது அவருக்கு வந்திருக்கும் நோய் நீண்ட காலமாக வெள்ளிச் சுரங்கத்து காற்றை சுவாசித்ததால் இருக்கலாம் என்று சில மருத்துவர்கள் அபிப்பிராயப்பட்டார்கள்.
எங்கள் நட்பு எப்போது எப்படி உருவானது என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன். பகலில் இருந்து இரவு தோன்றுவதுபோல அது பாட்டுக்கு நடந்தது. அவர் இரண்டாம் உலகப் போர் சம்பவங்களை சொல்வார் நான் கேட்டுக்கொண்டிருப்பேன். அவரிடம் நூற்றுக்கணக்கான கதைகள் இருந்தன. அப்படித்தான் ஒருநாள் அவர் புறா வளர்த்த கதையை கூறினார். அது அவருடைய மனைவிக்குகூட தெரியாத கதை. அத்தனை வருடங்களில் அதை மனைவிக்கு சொல்லவேண்டும் என்று அவருக்கு தோன்றவே இல்லை. என்ன காரணமோ என்னிடம் சொல்ல விரும்பினார். சொல்லிவிட்டு 70 வருடத்துக்கு முன் இறந்துபோன புறாவை நினைத்து விக்கி விக்கி அழுதார்.
மருத்துவ மனையின் தீவிரப் பிரிவில் கட்டிலில் படுத்திருந்த ஜோவின் உடம்பிலிருந்து பலவிதமான குழாய்கள் பலவிதமான நிறங்களில் வெளியேறின. செயற்கை சுவாச மெசினில் உடல் கிடந்தது. உணவும் குழாய் வழியாகவே செலுத்தப்பட்டது. உடல் கழிவும் குழாய் வழியாகவே வெளியேற்றப்பட்டது. ஓர் உடம்புதான் அங்கே கிடந்ததே தவிர அதன் செயல்பாடுகள் யாவும் வெளியே இருந்து இயக்கப்பட்டன. வலி நிவாரண மருந்து தொடர்ந்து உடலில் செலுத்தப்பட்டு உயிர் செயற்கையாக நீடிக்கப்பட்டது.
அவருடைய மனைவி, மகன், உறவினர்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுத்தனர். இப்படியே தொடரவேண்டுமா அல்லது அவருக்கு விடுதலை அளிக்கவேண்டுமா? இறுதியில் முடிவு எடுக்கப்பட்டது. மனைவி ஜோவுடன் பேசினார். ஜோவுடைய காது கேட்கும் ஆனால் அவரால் பேச முடியாது. மனைவி ஜோவின் கையை பற்றிக்கொண்டார்.
“இப்படியே தொடரவேண்டுமா அல்லது மெசினில் இருந்து விடுவிக்கவேண்டுமா? தொடரவேண்டுமென்றால் கையை அழுத்துங்கள்?” அவருடைய கை பேசாமல் கிடந்தது. அடுத்த கேள்வி.
“வலி நிவாரணம் கொடுத்தால் உங்களுக்கு வலி தெரியாது ஆனால் நினைவு தப்பிவிடும். கொடுக்கவேண்டும் என்றால் கையை அழுத்துங்கள்.” அவர் அழுத்தினார்.
“நான் உங்களை நேசிக்கிறேன். மணமுடித்த அன்று நேசித்ததுபோலவே இன்றும் நேசிக்கிறேன். சுகமாக கடவுங்கள். விரைவில் நானும் வந்துவிடுவே.ன்.” அதுவே கடைசி வார்த்தைகள். அவர் கைகளை இறுக்கி அழுத்தி விடை கொடுத்தார். அடுத்த நாள் அதிகாலை ஜோவின் உயிர் பிரிந்தது.
ஏன் அவரை மறக்கமுடியவில்லை என்று நினைத்துப்பார்க்கிறேன். என்னோடு படித்தவர் அல்ல; என்னோடு வேலை செய்தவர் அல்ல. இலக்கியக்காரர் அல்ல. வாசிப்பவர் அல்ல. சொல்லப்போனால் எனக்கும் அவருக்கும் ஈடுபாடான பொது விசயம் ஒன்றுகூட இல்லை. ஒரு நண்பரை எப்படி உபசரிப்பது என்பதை அவரிடம் கற்றுக்கொள்ளலாம். அவரை அணுகியதும் அன்பு கூடாரம்போல உங்களைச் சூழ்ந்துகொள்ளும். கைகளைப் பிடித்து குலுக்கும்போது இறுக்கி குலுக்குவார். தழுவும்போது இறுக்கி தழுவுவார். புன்னகைப்பார். விடை கொடுக்கும்போது உங்கள் ஓவர்கோட்டை உங்களுக்கு பின்னால் விரித்துப் பிடித்து ஒரு பணிவான சேவகனைப்போல காத்திருப்பார். நீங்கள் இரண்டு கைகளையும் நுழைக்கும் வரைக்கும் அசையாது நிற்பார். அப்படி ஒருவரும் இனிமேல் செய்யமாட்டார்கள். என் மீதி வாழ்நாளில் நான் கோட்டை அணியும் சமயங்களிலும் கழற்றும் சமயங்களிலும் அவரை நினைப்பேன். மறக்கமுடியாது என்றுதான் தோன்றுகிறது.
Translator’s Statement:
“Unrelenting Grief” (“Aaraathuyaram”) is a narrative set in Canada, in which a dying old Polish immigrant, who had moved to Canada 60 years back following the war, recounts to the narrator an incident that occurred during his younger years in Poland. He describes the story of his pet messenger dove Albinka, trained to fly distances back and forth, which had to be sold to buy food for the family during the war. Remembering how 70 years back, Albinka, despite its clipped wings, had walked about seventeen miles and managed to come back with bleeding claws and died at home that night, the old man is overcome with grief. In translating this non-fiction piece, I encountered fairly minimal challenges other than making sure that the voice of the narrator was maintained throughout the translation and that the sentiments expressed in the original text were transferred seamlessly into the target language.
Appadurai Muttulingam, a recipient of numerous literary awards in Sri Lanka, India, and Canada including the Sri Lankan Government Sahitya Academy Award, is the author of 15 short story collections, 2 novels, and 10 collections of essays in Tamil. Originally from Sri Lanka, Muttulingam, who lives in Canada, is the founder/director of Tamil Literary Garden, a charitable organization in Toronto that promotes literary excellence. He is also the founder/director of Tamil Chair Inc., a charitable organization registered in the United States for the establishment of Tamil Studies at Harvard University.
Thila Varghese lives in Canada, where she works part-time during the academic year as a Senior Writing Advisor at Western University. Thila’s translations of Tamil literary works have been published in international magazines and journals. Her translation entry was shortlisted for the 2023 Armory Square Prize for South Asian Literature in Translation. Thila is also the recipient of the ALTA’s 2024 Emerging Translator Mentorship in Poetry from a South Asian Language, provided in partnership with the SALT Project.